இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..!

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..!
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..!

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தயாராகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அரசு 2-ஆவது முறையாக வெற்றிபெற்ற பின் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டத்திருத்தங்கள் அத்தொடரில் மேற்கொள்ளப்பட்டன. 

முன்எப்போதும் இல்லாதவகையில் ஒரே தொடரில், மக்களவையில் 35 மசோதாக்களும் மாநிலங்களவையில் 32 மசோதாக்களும் நிறைவேறின.  ஆனால் அரசு போதிய விவாதங்கள் இன்றி அவசர அவசரமாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில் இன்று தொடங்க உள்ள குளிர் கால கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை தரும் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை இத்தொடரில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என தெரிகிறது. 

இது தவிர 27 மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் பரிசீலிக்கவும் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் பொருளாதார மந்த நிலை, காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா போன்ற தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பது, விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட அம்சங்களில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன. 

இந்நிலையில் குளிர்கால தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com