நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு, நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மன்மோகன்சிங் குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 22 ஆம் தேதி மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. குஜராத் சட்டப்பேரவைத்தேர்தல் பரப்புரையின்போது பாலன்பூர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 6 ஆம் தேதி மணிசங்கர் அய்யரின் வீட்டில் நடந்த இரவு விருந்தில் மன்மோகன்சிங் மற்றும் சில பாகிஸ்தான் அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறினார். குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதாவை தோல்வியடைய வைக்க பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அறிக்கை மூலம் கடும் கண்டனத்தை தெரிவித்த மன்மோகன்சிங், தன் மீது அவமதிப்பான, தவறான குற்றச்சாட்டுகளை எல்லையற்ற கற்பனையோடு மோடி பேசியுள்ளது தனக்கு வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். இரவு விருந்தில் கலந்து கொண்டவர்கள் பட்டியலை வெளியிட்டவர், இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் குஜராத் தேர்தலில் பாஜக தோற்பதற்காக, பாகிஸ்தானுடன் இணைந்து சதி செய்வதாக தம்மீது கூறிய குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மன்மோகன்சிங் குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 4 நாள் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.