வாரம் முழுவதும் முடங்கிய நாடாளுமன்றம் - அரசுக்கு 90 கோடி இழப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் இந்த வாரம் முழுவதும் முடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், தொடர்ந்து 4 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், காங்கிரஸ், திமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் அவையின் மையப்பகுதியில் கூடி, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அவர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். உறுப்பினர்களின் போராட்டத்தால் மக்களவை முதலில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக 12 மணிக்கே அவை கூடியது. அப்போதும் அமளி நீடித்தால் 12.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தின்போது கடும் அமளிக்கு இடையே கனிம திருத்த மசோதா மற்றும் திவால் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்தால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல மாநிலங்களவை கூடியதும், அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மகளிர் தின வாழ்த்துகளை கூறினார். எனினும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், 15 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

