28 ஆண்டுகால மாநிலங்களவை பதவிக்கு மன்மோகன் சிங் பை..பை..
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 28 ஆண்டுகால மாநிலங்களவை எம்பி பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991ஆம் ஆண்டு அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். அதன்பிறகு அந்த மாநிலத்திலிருந்து தொடர்ச்சியாக தேர்வாகி வந்தார். அத்துடன் 2004 முதல் 2014 வரை இவர் மாநிலங்களவையின் தலைவர் பதவியிலும் நாட்டின் பிரதமராகவும் இருந்தார். அத்துடன் ஒருமுறை இவர் மாநிலங்களவையின் எதிர்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இம்முறை அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்ய போதிய பலம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. இதனால் மன்மோகன் சிங் மறுபடியும் அசாம் மாநிலத்திலிருந்து எம்பியாக தேர்வாக முடியாது. ஏனென்றால் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடம் 25 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். எம்பியை தேர்வு செய்ய 43 எம்.எல்.ஏக்கள் தேவை. எனவே அங்கிருந்து மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட இயலாது.
அதேபோல தற்போது மாநிலங்களவையில் மொத்தம் 9 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் ஒடிசாவில் 4, பிகார் மற்றும் குஜராத்தில் தலா 2, தமிழ்நாட்டில் ஒரு இடம் காலியாக உள்ளன. ஆக, காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மாநிலத்தில் மட்டும் மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்ய போதிய எண்ணிக்கை உள்ளது. அத்துடன் கர்நாடகா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு பலம் உள்ளது. எனினும் இந்த மாநிலங்களிலிருந்து தற்போது மாநிலங்களவையில் எவ்வித காலியிடமும் இல்லை.
மேலும் காங்கிரஸ் கட்சியின் ஏதாவது ஒரு எம்பியை ராஜினாமா செய்ய வைத்து அந்த இடத்திலிருந்து மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஆகவே மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்றத்தில் அவருடைய பங்கேற்பு என சகலமும் முடிவுக்கு வந்துள்ளது.