
இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்ந்த நாடாளுமன்ற கட்டடம், இன்றோடு உறுப்பினர்களிடம் இருந்து விடைபெற்றிருக்கிறது. சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாளை முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற இருக்கிறது. அத்தோடு இன்றோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்டடத்திற்கும் மாறுகின்றனர்.
இந்நிலையில், நூறாண்டை நெருங்கும் தற்போதைய ஆலயம் விடைபெற்றது ஏன் என்ற கூறுகளையும், அதன் சிறப்பம்சங்களையும் பார்க்கலாம்..
இன்றுவரை பயன்பாட்டில் இருந்த இந்த கட்டடம் 1921ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி 1927ம் ஆண்டு அப்போதைய வைசிராய் இர்வின் பிரபுவால் தங்கச்சாவி கொண்டு திறந்துவைக்கப்பட்டது. ஹெர்பர்ட் பேக்கர் என்பவர் கட்டிடத்தை வடிவமைக்க, 6 ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடந்து திறக்கப்பட்டது.
சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கட்டடம், முதல் தளத்தின் 144 கம்பீர தூண்களால் தாங்கப்படுகிறது. குறிப்பாக வட்டவடிவில் அமைக்கப்பட்ட கட்டடத்தின் வடிவம்தான் உலக நாடுகளிடையே இந்திய நாடாளுமன்றத்தை தனித்துவமாக காட்டுகிறது.
2 உலகப்போர்கள், இந்திய விடுதலை, அரசியலமைப்பு சட்டம் என்று அனைத்தையும் பார்த்த இந்த நாடாளுமன்றம் பல காரசார விவாதங்கள், முக்கிய தீர்மானங்கள், பிரச்சனைகள், மகிழ்ச்சியான தருணங்களையும் தனக்குள் புதைத்து வைத்துள்ளது.
குறிப்பாக, முக்கிய அரசியல் ஆளுமைகள் அனைவரின் பாதங்களும் இங்கு பதிந்துள்ளன. அற்புதமான அரசியல் உரைகள் நிகழ்த்தப்பட்ட இந்த கட்டடத்தில், போதிய இடவசதி, தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் புதிய நாடாளுமன்றத்திற்கு செல்கிறது உறுப்பினர்கள் குழு. நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம், தீவிபத்தின் போது எளிதில் தப்பிக்க முடியாத சூழல் போன்றவை குறைகளாகவும் பார்க்கப்படுகிறது.
இந்திய ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும் இந்த நாடாளுமன்றம் இடிக்கப்படாது, அருங்காட்சியமாக மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும் என்று தெரிகிறது. நாடாளுமன்ற விரிவாக்கம், நவீனத்துவம், பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகவும் புதிய நாடாளுமன்றத்தை ஏற்பாடு செய்துள்ளது மத்திய அரசு.. ஆழமான தன்னுடைய நினைவுகளோடு அருகில் இருக்கும் புதிய நாடாளுமன்றத்திற்கு வழிவிட்டு நிற்கிறது பழைய கட்டடம்.
- யுவராம்