''முக்கிய மசோதாக்கள்... அதிக நாட்கள்'' - கவனம் பெறும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்
மோடி அரசின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பல சாதனைகளை படைக்கவுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றவுடன் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் ஜுலை மாதம் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் பட்ஜெட் மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுவரை 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 7ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை தாக்கல் செய்யப்பட்டுள்ள 35 மசோதாக்களையும் அரசு நிறைவேற்றும் வாய்ப்பு உள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேறும் பட்சத்தில் ஒரு கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மசோதாக்களும் அந்தத் தொடரிலேயே நிறைவேறியது என்ற சாதனையை அரசு படைத்துவிடும்.
அத்துடன் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் நேரம் மிகவும் பயன் உடையதாக செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுவரை 250 மணி நேரம் விவாதம் மற்றும் மசோதாக்கள் நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல இம்முறை முதல் முறை எம்பியாக தேர்வான 462 பேரில் 412 பேர் தங்களின் முதல் பேச்சை முதல் கூட்டத் தொடரிலேயே பேசியுள்ளனர்.
மேலும் ‘வெள்ளையனே வெளியேறு’ புரட்சி ஆரம்பித்த ஆகஸ்ட் 9ஆம் தேதியை பறைசாற்றும் விதமாக அன்று வரை இந்தக் கூட்டத் தொடர் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால் இந்தக் கூட்டத் தொடர் மொத்தம் 40 நாட்கள் நடைபெறும். இது நடைபெறும் பட்சத்தில் 17ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத் தொடர் 40 நாட்கள் நீடித்துள்ளது என்ற சாதனையையும் இந்தத் தொடர் படைக்கும். ஏனென்றால் கடைசியாக கடந்த 2002ஆம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாட்கள் நடைபெற்றது.