நாடாளுமன்ற முடக்கம் நீடிப்பு: எதிர்க்கட்சிகள் மீது பழிசுமத்த முயற்சிக்கிறதா மத்திய அரசு?

நாடாளுமன்ற முடக்கம் நீடிப்பு: எதிர்க்கட்சிகள் மீது பழிசுமத்த முயற்சிக்கிறதா மத்திய அரசு?
நாடாளுமன்ற முடக்கம் நீடிப்பு: எதிர்க்கட்சிகள் மீது பழிசுமத்த முயற்சிக்கிறதா மத்திய அரசு?

'சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முனையவில்லை' என மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் புதிய குற்றச்சாட்டை இன்று (வியாழக்கிழமை) சுமத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை மீண்டும் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்ற தவறான எண்ணத்தை மத்திய அரசு பரப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

இரண்டு அவைகளிலும் வழக்கம்போலவே வியாழக்கிழமை முழுவதும் அமளி தொடர்ந்த நிலையில், மாநிலங்களவையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என பழிசுமத்த அரசு தரப்பு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னை சந்தித்து சமாதானம் பேசியதாகவும், ஆனால் அந்த முயற்சி நிராகரிக்கப்பட்டதாகவும் பேசப்படுவது சரியல்ல எனவும் கார்கே வாதிட்டார். ராஜ்நாத் சிங் தன்னிடம் பேசியது உண்மைதான் என்றும், அந்த சமயத்திலே மத்திய அமைச்சர் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு மீண்டும் சமாதான முயற்சியை தொடரலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், ராஜ்நாத் சிங் வெளிநாட்டு பயணத்துக்குப் பிறகு எந்தவித சமாதானப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கார்கே மாநிலங்களவையில் பேசினார். காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் பேசியபோது அமைதி காத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்தக் குற்றச்சாட்டுக்கு ராஜ்நாத் சிங் பதிலளிக்க முயற்சி செய்தபோது மீண்டும் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கிடையே மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுவது சந்தர்ப்பவாதம் எனவும், ஜனநாயக விரோதம் எனவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் இரண்டு அவைகளிலும் இன்று கண்டனம் தெரிவித்தனர்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் நேற்று வரை நடந்து வந்த நிகழ்வைப் போலவே, இன்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியபடி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். "இந்த அவை உங்கள் அவை. இதன் மாண்பை காப்பது உங்களுடைய கடமை" என்று அவர் வலியுறுத்தினார்.

ஒருபுறம் மக்களவையில் மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு என்ற நிலையே தொடர்ந்தாலும், உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசு மீண்டும் தொடங்கியது. மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முக்கிய மசோதாக்களை நாடாளுமன்ற குழுக்களுக்கு அனுப்பி விரிவான பரிசீலனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், அமளி தொடர்ந்த நிலையில் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டன. இதனால் மேலும் அதிருப்தி அடைந்துள்ள எதிர்க்கட்சிகள் தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) காலை மீண்டும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

- செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com