107ல் 18 மணி நேரம் மட்டுமே செயல்பட்ட நாடாளுமன்றம் - ரூ.133 கோடிக்கு மேல் இழப்பு
ஜூலை 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொடர் அமளி காரணமாக , நாடாளுமன்றம் மொத்தம் செயல்படவேண்டிய 107 மணிநேரத்தில் 18 மணிநேரம் மட்டுமே செயல்பட்டள்ளது, இதனால் அரசின் கருவூலத்திற்கு ரூ.133 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்டதிலிருந்து, பெகாசஸ் உளவு சர்ச்சை, மூன்று வேளாண் சட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னைகளில் நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிவடையும் அமர்வில் இதுவரை 89 மணிநேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாடாளுமன்றம் மொத்தமுள்ள மணிநேரங்களில் 16.8 சதவீதம் நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. மாநிலங்களவை அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 21 சதவீத நேரமும், மக்களவை திட்டமிடப்பட்ட நேரத்தில் 13 சதவீத நேரமும் மட்டுமே செயல்பட முடிந்தது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை மொத்தமுள்ள 54 மணிநேரத்தில் சுமார் ஏழு மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை மொத்தமுள்ள 53 மணிநேரத்தில் 11 மணி நேரம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.