நாடாளுமன்ற வளாகத்தில் இயங்கி வரும் உணவு விடுதி விரைவில் முழு சைவமாக மாற இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள உணவகங்களை இந்திய ரயில்வே நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) நடத்தி வருகிறது.
இதுவரை இந்த உணவகங்களில் சைவ உணவு மற்றும் அசைவ உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இந்த ஐ.ஆர்.சி.டி.சி உணவகங்களில் பரிமாறப்படும் உணவின் தரம் சரியாக இல்லை எனத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதால், மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே தேநீர் மற்றும் காபி உள்ளிட்ட பானங்களிலிருந்து மதிய உணவு அல்லது ஏதேனும் நொறுக்குத் தீனி உள்ளிட்ட எதுவாக இருந்தாலும், ஐ.ஆர்.சி.டி.சி உணவகங்கள்தான் அதை நாடாளுமன்ற வளாகத்தில் பரிமாற வேண்டும் என்ற நிலை மாற்றப்பட உள்ளது.
மானிய விலையில் வழங்கப்படும் இந்த உணவுகளை தயார் செய்து பரிமாற ஐ.ஆர்.சி.டி.சி அல்லாத வேறு அமைப்புக்கு அனுமதி அளிக்க ஆலோசனை நடந்து வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டால், இப்போதுள்ள மானியமும் நீக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆலோசனைகள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்று வருகின்றன.
ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்திற்குப் பதிலாக நாடாளுமன்ற வளாகத்தில் உணவு தயாரித்து பரிமாற, ஹல்திராம் மற்றும் பிகானேர்வாலா போன்ற பிரபல நிறுவனங்களின் சேவையை பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. அசோகா ஹோட்டலை நடத்திவரும் அரசு நிறுவனமான ITDC (ஐ.டி.டி.சி) பெயரும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐடிசி நிறுவனம் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள். ஹல்திராம் அல்லது பிகானேர்வாலா இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்படலாம் என்பது அவர்களுடைய கணிப்பு. வணிக ரீதியான லாபம் ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு உணவு பரிமாறும் உரிமையை பெறுவது மதிப்பு ரீதியாக மிகப்பெரிய சிறப்பாக கருதப்படும் என்பது முக்கிய அம்சமாகும். இந்த இரண்டு நிறுவனங்களுமே சைவ உணவுகளை மட்டுமே தயாரித்து பரிமாறும் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே விலையேற்றம் மற்றும் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் என்கிற நிலை நாடாளுமன்ற உணவகங்களில் ஏற்பட உள்ளது. இந்த மாற்றம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.