போலியோ மருந்தின் விலை ரூ.95.20ல் இருந்து ரூ.172.59ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீதான விவாத அமர்வு நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பி வினோத்குமார் போயனப்பல்லி என்பவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதாவது சமீபத்தில் போலியோ சொட்டு மருந்தின் விலை அதிகரித்திருக்கிறதா? அதேபோல இந்திய அரசு சர்வதேச நாடுகளிடம் போலியோ சொட்டு மருந்துக்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை கேட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே “ஐபிவிக்கான போலியோ சொட்டு மருந்து விலை அதிகரித்துள்ளது. பல நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் விலை அதிகரித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் ஒரு மருந்து 95.20 ரூபாயாக இருந்த விலை தற்போது ஒரு டோகேஜின் விலை ரூ.172.59ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.