மகளை கொன்று புதைத்த பெற்றோர்.. அம்பலமானது அதிர்ச்சி தகவல்..!
ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்பதற்காக பெற்றோர்களே ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட தங்களது மகளை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டம் சவுதார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தபால். இவருக்கு 6 வயதில் தாரா என்ற பெண் குழந்தை உண்டு. சிறுமி தாரா ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவள். அத்தோடு ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பும் சிறுமிக்கு இருந்துள்ளது. இந்நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட தனது மகளை, பெற்றக் குழந்தை என்றும் பாராமால் பெற்றோர்களே சேர்ந்து கொன்று புதைத்துள்ளனர். இதுதொடர்பாக அனந்தபாலின் பக்கத்து வீட்டுக்காரர் போலீசில்
புகார் அளித்தார். அதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மந்திரவாதி ஒருவர் அனந்தபாலிடம் சிறுமி தாராவை வீட்டிலேயே கொன்று புதைத்தாள் உங்களுக்கு பிறக்கும் அடுத்த குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும் என கூறியுள்ளார். அனந்தபாலுக்கு ஏற்னகவே ஒரு மகன் உண்டு. அவருக்கும் ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பு உண்டு. எனவே ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு சிறுமி தாராவை கொன்று புதைத்துள்ளனர் பெற்றோர்.
இதுகுறித்து தாராவின் பாட்டி கூறும்போது, “ தாரா மீது அவள் அம்மாவுக்கு தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் அன்பு இல்லை. நிறையமருந்து மாத்திரைகள் கொடுத்து மருத்துவம் பார்த்தனர். இருப்பினும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் தாரா நாளுக்கு நாள் மெலிந்து கொண்டுதான் போனாள். எனவே தாராவின் அம்மா மந்திரவாதியின் சொல்படி, தாராவை வீட்டிலேயே கொன்று புதைத்து கோயில் கட்ட முடிவு செய்தார்”என தெரிவித்தார்.
வீட்டில் புதைக்கப்பட்ட தாராவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தாரா கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. அத்தோடு தாராவின் வயிற்றில் உணவு ஏதும் இல்லை. இதனிடையே தாராவின் பெற்றோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.