மத்திய அரசுக்கு இருக்கும் கடன் எவ்வளவு தெரியுமா? - இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி வெளியிட்ட தகவல்!

கடந்த மார்ச் நிலவரப்படி நாட்டின் கடன் 155 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். அதன்படி, கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசுக்கு 155.60 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

இது கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1% ஆகும். கடந்த நிதியாண்டின் இறுதியில் மாநில அரசுகளின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 28% என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான சிறப்பு உதவித்திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களுக்கு மூலதன செலவாகவும் முதலீட்டுக்காகவும் 84,883 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் இதுவரை 29,517 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் மூலதன செலவினம் 2.15 % ஆக இருந்தது. இது 2022 - 23 ஆம் ஆண்டில் 2.7 விழுக்காடாக அதிகரித்தது.

2025-26 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.5 %-க்கும் கீழ் உள்ள நிலையை அடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com