“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Published on
கொரோனா வைரஸை விட பீதிதான் அதிக உயிர்களை அழிக்கும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது.
 பிரதமர் நரேந்திர மோடி  மார்ச் 24 ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். ஆகவே நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் குழந்தைகளுடன் பெரும் நகரங்களிலிருந்து புலம்பெயர்ந்து, தங்களது சொந்த கிராமங்களை நோக்கி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை நடந்தே பயணித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் உணவு மற்றும் வாடகை செலுத்தப் பணம் இல்லாததால் பெரு நகரங்களை விட்டு வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் தொற்று நோயின் சங்கிலித் தொடரை உடைப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்குப் பலனே இல்லாமல் போய் விடும் என்று பல சுகாதார வல்லுநர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் "கொரோனா வைரஸை விட பீதி அதிகமான உயிர்களை அழிக்கும்" என்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம், புலம்பெயர்ந்தோருக்கு ஆலோசனை வழங்குமாறு மத்திய அரசைக்  கேட்டுக் கொண்டுள்ளது.  பலவகைகளில்  பரவி வரும்  போலி செய்திகள் மூலம்  உருவாகும் பீதியை எதிர்கொள்ளும் வகையில்  கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த  24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த  உச்சநீதிமனறத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சொந்த ஊர் மற்றும் வீடுகளை நோக்கி புலம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார். மேலும் ஏற்கனவே நோய் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்குமாறும்  நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 
“பீதியைத் தீர்க்கும் வகையில் ஆலோசனை வழங்குவதற்கு நாங்கள் பரிசீலித்து வருகிறோம். 22.8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் பெரும்பாலும் ஏழைகள், புலம்பெயர்ந்தவர்கள், தினசரி கூலிகள் ஆவர். அவர்களுக்குத் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் ”என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அரசு தரப்பில் விளக்கம் அளித்தார்.
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசு தனது சக்தியை பயன்படுத்த வேண்டாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி மத்திய அரசை கேட்டுக்கொண்டார். “தன்னார்வலர்கள் இந்த முகாம்களை நிர்வகிக்கட்டும். காவல்துறையினர்களை வைத்து இந்தப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது.   எந்தவொரு அதிகாரத்தை வைத்தும் அரசு மிரட்டக் கூடாது”என்று விசாரணையின் போது  நீதிபதி பாப்டே கூறினார்.
நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், புலம்பெயரும் தொழிலாளர்களின் வெளியேற்றம் தொடர்பாக வழக்கறிஞர்கள் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா மற்றும் ரஷ்மி பன்சால் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த இரண்டு  பொதுநல மனுக்களை விசாரித்து வருகிறது.  பீதி மற்றும் பயத்தின் காரணமாகத் தொழிலாளர்கள் இடம்பெயர்வது  குறித்து விசாரித்த நீதிமன்றம் கொரோனா வைரஸை விட  பீதி என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருவதைக் கவனித்து, அந்த நிலைமையைக் குறித்து அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com