சிறுமி மானபங்கம்: மொட்டை அடித்து ’புனிதப்படுத்திய’ பஞ்சாயத்து!
மானபங்கம் செய்யப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அதிர்ச்சி அளித்திருக்கிறது கிராமத்துப் பஞ்சாயத்து.
சட்டீஸ்கர் மாநிலம் கவார்தா மாவட்டத்தில் உள்ள மலைகிராமம் ஒன்றைச் சேர்ந்தவர், 13 வயசு சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை உள்ளுரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் அர்ஜுன், மது போதையில் மானபங்கம் செய்துள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை ஊரில் சொல்லியிருக்கிறார் சுதா. பஞ்சாயத்துக் கூடியது. சிறுமியைப் புனிதப்படுத்த வேண்டும் என்று கூறி, தலைமுடியை வெட்டியுள்ளனர். பின்னர் தலையின் ஒருபக்கம் மட்டும் மொட்டை அடித்து, ஊரைவிட்டு தனியாக வசிக்க வேண்டும் என்று ’தீர்ப்பு’ கூறியுள்ளனர். மானபங்கம் செய்த அர்ஜூன், உள்ளூரில் ஜாலியாக அலைந்துள்ளார்.
சமூகத் தொண்டு நிறுவனம் மூலம் இந்த ’தீர்ப்பு’ போலீசுக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் ஊருக்குள் வந்து அர்ஜூனை கைது செய்தனர். புனித தீர்ப்புக் கூறிய பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊரை விட்டு ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.