காவல்நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர்.. படகில் பணிக்கு செல்லும் காவலர்கள்..!
போலீஸ் நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் போலீசாரே தங்களது பணியை மேற்கொள்ள படகில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமான கேரளாவின் பனமரம் காவல்நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடரும் கனமழையால் வள்ளியபுழா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனாலேயே பனமரம் காவல்நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் காவல்நிலையத்தை அணுக முடியாத நிலையில் உள்ளனர். காவலர்கள் தங்ளது பணியை மேற்கொள்ள வேண்டும் என்றால் கூட படகில்தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் விசாரணையை மேற்கொள்ள முடியாமல் கூட அவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
பனமரம் காவல்நிலையம் வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது. இதனிடையே அக்காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் சிலர் கூறும்போது, “ கட்டிடத்தின் மேற்கூரையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. சிறிய மழை என்றால் கூட அதன் வழியாக உள்ளுக்குள் மழை நீர் வந்துவிடுகிறது. காவல்நிலையத்திற்குள்ளேயே குடை பிடித்தப்படி தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கோப்புகளை பத்திரமாக வைப்பதற்கு கூட இடமில்லை” என்றனர்.
கடந்த 2010-ஆம் ஆண்டே இந்தக் காவல்நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்தக் காவல்நிலையத்தை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேசமயம் கட்டிடம் சரியில்லை எனப் பலமுறை புகார்கள் அளித்தும் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் தங்களது பணியை கூட முறையாக செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.