111 ஆண்டுகள் கடந்தும் கம்பீரம் காட்டும் பாம்பன்... வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்படுமா?
ராமேஸ்வரத்தையும் பாம்பனையும் இணைக்கும் வகையில் புதிதாக செங்குத்து தூக்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதன் முறையாக கட்டப்பட்ட கடல் பாலமாகும். இந்த ராமேஸ்வரம் பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
111 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது பாம்பன் பாலம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1911 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்தப் பாலம், வெறும் இரண்டே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு, 1914 பிப்ரவரி 24 அன்று ரயில் சேவைக்காகத் திறக்கப்பட்டது. சென்னை எழும்பூரிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வரை ஒரே டிக்கெட்டில் பயணிக்க உதவியது இந்தப் பாலம். கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பாலம் 2.05 கி.மீ நீளமும், 143 தூண்களும் கொண்டது.
பாலத்தின் மையப் பகுதியில், கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 289 அடி நீள தூக்குப் பாலம் கைகளால் இயக்கப்படுகிறது. பாலத்தின் 56வது தூணில் காற்றின் வேகத்தை அளவிடும் அனிமோமீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 58 கி.மீட்டருக்கு மேல் இருந்தால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
இத்தகைய தொழில் நுட்பங்களே அக்காலத்திலேயே உள்ளடக்கி கட்டப்பட்ட பாலத்தை இந்திய பாலங்களின் ராணி என்றும் அனைவராலும் அழைக்கபப்டுகிறது.. மேலும் இந்த பாலம் பாக் ஜலசந்தி கடல் பகுதியையும், மன்னார் வளைகுடா கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.. இத்தகைய சிறப்புமிக்க இந்த பாம்பன் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததை அடுத்து புதிய ரயில் பாலம் அமைக்க கடந்த 2018ம் ஆண்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.
இந்தத் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு ரயில்பாலப் பணிகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து பாலத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் முதல் செங்குத்து கடல் லிப்ட் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்த நிலையில் 110 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற தற்போது டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த பாலத்தை பாதுகாத்து இந்தியாவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.