காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 3 ராணுவத்தினர் உயிரிழப்பு
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கெர்ரி செக்டார் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த மேஜர் மொஹர்கர் பிரபுல், ராணுவ வீரர்கள் நாயக் குர்மெய்ல் சிங், பர்கெட் சிங், ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது. மேலும் இரண்டு வீரர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வீரர்களின் சேவைக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருப்பதாக ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு புகழாரம் சூட்டிய காஷ்மீர் துணை முதலமைச்சர் நிர்மல் சிங், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் நாள் தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.