‘இந்தியாவுடனான 3 போர்கள் மூலம் பாடம் கற்றுக்கொண்டோம்’- சுமூக உறவை விரும்பும் பாக். பிரதமர்

‘இந்தியாவுடனான 3 போர்கள் மூலம் பாடம் கற்றுக்கொண்டோம்’- சுமூக உறவை விரும்பும் பாக். பிரதமர்
‘இந்தியாவுடனான 3 போர்கள் மூலம் பாடம் கற்றுக்கொண்டோம்’- சுமூக உறவை விரும்பும் பாக். பிரதமர்

இந்தியாவுடன் நடைபெற்ற மூன்று போர்கள் மூலம் பாகிஸ்தான் பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது எனவும், இந்தியாவுடன் சுமூகமான உறவை தங்கள் நாடு விரும்புகிறது எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் இந்தியாவுடன் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் இந்தப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு சகோதர நாடாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இந்தியா-பாகிஸ்தான் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தானின் பல்வேறுப் பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் தொடர் தாக்குதல் ஆகியவற்றால் பாகிஸ்தானில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்துள்ளன. பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் இந்தப் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து, பண வீக்கம் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் இந்தியாவுடன் அமைதிப் பாதையில் பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மூன்று இந்தியா-பாகிஸ்தான் போர்கள் காரணமாக பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது எனவும், வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை எனவும் ஷெபாஸ் ஷெரிஃப் குறிப்பிட்டுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஏழ்மை காரணமாக பாகிஸ்தான் மக்கள் கடும் பிரச்சனைகளை சந்தித்து வருவதாக ஷெபாஸ் ஷெரிஃப் ஐக்கிய அரபு அமீரக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன் ஆட்சி மீண்டும் நடைபெறும் நிலையில், பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. அத்துடன் தேரிக் ஏ தாலிபன் தீவிரவாத அமைப்பு பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மூலம் அரசியல் ரீதியாக கிளர்ச்சி ஏற்படும் எனவும் பாகிஸ்தானில் அச்சம் நிலவுகிறது.

சீனாவுடன் கைக்கோர்த்து தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த பாகிஸ்தான், தற்போது சீனாவிடம் இருந்து மேலும் பொருளாதார உதவி கிடைக்காது என்கிற சிக்கலை சந்தித்து வருகிறது. அதே சமயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு உதவக் கூடாது என இந்தியாவும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரகுமான் மக்கி சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். லஸ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹாபீஸ் சையத்தின் உறவினர்களான இவருடைய பெயர் ஐநாவின் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சீனா இவருடைய பெயரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க விடாமல் தடுத்து வந்தது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அப்துல் ரகுமான் மக்கி பெயர் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதை ஐநாவின் பாதுகாப்புக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. தீவிரவாதத்தை தூண்டியது மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை இந்த தீவிரவாதி மீது ஐநா பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் அப்துல் ரகுமான் மக்கி இருந்தார் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தெரிவித்துள்ளன.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com