“பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை சீண்டுகிறது” - அரசு விளக்கம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் ராணுவ நடவடிக்கைகள் பாகிஸ்தானின் எதிர்தாக்குதலும் தொடர்ச்சியாக நான்காவது நாளாக நீடித்து வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இல்லாத அளவிற்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் கள நிலவரம் குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் காமாண்டர் வியோமிகா சிங் போன்றோர் செய்தியாளர்களைச் சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தனர். அப்போது விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ச்சியாகத் தாக்கி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “சிர்சா மற்றும் சூரத்நகரில் உள்ள விமானப்படை நிலையங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அடம்பூரில் உள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு, மின் அமைப்புகள், சைபர் அமைப்புகள் ஆகியவற்றின் பெரும் பகுதிகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை” எனத் தெரிவித்தார்.
அதிவேக ஏவுகணைகளால் பஞ்சாப் விமானப்படை தளங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சிப்பதாக சோபியா குரேஷி தெரிவித்தார். கர்னல் சோஃபியா குரேஷி கூறுகையில், “பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை சீண்டுகிறது; தக்க பதிலடி கொடுத்துள்ளோம். பாகிஸ்தான் ராணுவம் மேற்கு எல்லைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்தியாவின் இராணுவ தளங்களைத் தாக்க பாகிஸ்தான் படைகள் ட்ரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன. பாகிஸ்தான் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைக் கூடத்தாக்கி வருகிறது” எனத் தெரிவித்தார்.
விங் காமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “விமானப்படை தளங்கள் அருகே உள்ள மருத்துவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் தாக்கியது. பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்குகள், ரேடார் அமைப்புகள் உள்ளிட்டவை தாக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.
நாட்கள் செல்லச் செல்ல போர் பதற்றங்கள் குறையும் என தேசம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் சூழலில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் போர் பதற்றங்களை மேலும் அதிகரித்தபடியே இருக்கின்றன.