“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில்தான் தீவிரவாதத்தின் மரபணு இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. உலக அரங்கில் ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான கருத்துகளை பரப்பும் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அனன்யா அகர்வால் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பேசிய அவர், மோசமான நிர்வாகத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பாகிஸ்தானில் தீவிரவாதத்தின் ஆணி வேர் இருப்பதாகவும், அந்நாடு தீவிரவாதத்தின் சமூகமாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், பின்லேடன், ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் நாயகர்களாக சித்தரித்து புகழாரம் சூட்டியிருப்பதை அனன்யா அகர்வால் சுட்டிக்காட்டினார். 1947ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் 23 சதவிகிதம் இருந்த நிலையில் தற்போது அவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு கட்டாய மதமாற்றம் உள்ளிட்டவையே காரணம் என அனன்யா அகர்வால் தெரிவித்தார்.