360 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு
தங்கள் நாட்டு சிறையில் உள்ள 360 இந்திய மீன்வர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யுவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
அரபிக் கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை அவ்வவ்போது கைது செய்யும். அதேபோல், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மீனவர்களை இந்திய தரப்பிலும் கைது செய்வார்கள். அதேபோல், இருநாட்டு சிறையில் இருக்கும் மீனவர்கள் அவ்வவ்போது நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள்.
அந்த வகையில், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 360 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் - இந்தியா மக்களுக்கான அமைதி மற்றும் ஜனநயக அமைப்பின் உறுப்பினர் ஜிவன் ஜுங்கி கூறுகையில், “ மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கு இது நல்ல செய்தி. 360 இந்தியர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக பாகிஸ்தானிடமிருந்து தகவல் வந்துள்ளது.
விடுவிக்கப்பட்டவுள்ள 360 மீனவர்களில் 355 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதில், 100 பேர் முதல் கட்டமாக வாஹா எல்லையில் இன்று விடுவிக்கப்படுகிறார்கள். இரண்டாவது கட்டமாக 100 இந்தியர்கள் ஏப்ரல் 15ம் தேதி வருவார்கள். மூன்றாவது கட்டமாகவும் 100 பேர் ஏப்ரல் 22ம் தேதி வருகிறார்கள். கடைசி கட்டமாக ஏப்ரல் 29இல் 60 பேர் வருகின்றனர்” என்று கூறினார்.