\
Pak Bahawalpur terror compound restored destroyed by India during Operation Sindoor
Jaish-e-Mohammed Headquarters Bahawalpurani

அழிக்கப்பட்ட தலைமை பயங்கரவாத முகாம்.. 15 மாதங்களில் புதுப்பிப்பு.. நிதியுதவி வழங்கிய பாகிஸ்தான்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது சேதமுற்ற பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ராணுவ சீருடை அணிந்த மூன்று பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளிப்பட்டு சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பஹாவல்பூரில் அமைந்திருந்த பயங்கரவாத அமைப்பின் முகாம் இப்போது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதாகச் செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் பஹாவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் 'மர்கஸ் சுபானல்லா' தலைமையகம் அமைந்துள்ளது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முகாம், இந்தியாவில் நடத்தப்பட்ட 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான் கோட் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல்களுக்குத் திட்டம் தீட்டப்பட்ட முக்கிய ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையமாகச் செயல்பட்டு வந்தது. ’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்தக் கட்டடம் அழிக்கப்பட்டது.

ஆனால், தற்போது 15 மாதங்களில் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தாக்குதலில் சேதமடைந்த மைய மண்டபம் (Central Hall) மற்றும் கோபுரங்கள் (Domes) புதிய மார்பிள் கற்கள், கான்கிரீட் மற்றும் வண்ணப் பூச்சுகளுடன் சீரமைக்கப்பட்டு சேதத்தின் தடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. மேலும், தாக்குதலில் சேதமடைந்த 'மதர்சா அல்-சபீர்' மற்றும் பயங்கரவாத தளபதிகளின் குடியிருப்புப் பகுதிகள் அகற்றப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தவிர, உளவுத்துறை தகவல்களின்படி, இந்த முகாமைக் மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் அரசு தவணை முறையில் சுமார் 25 கோடி பாகிஸ்தான் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதில் 11 கோடி ரூபாய் மைய மண்டபத்திற்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த முகாமில் மீண்டும் தீவிரவாதப் பயிற்சிகள் தொடங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுவதால், எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com