இத்தாலி கண்காட்சியில் இடம் பிடித்த பழங்குடி மூதாட்டியின் ஓவியங்கள்
மத்திய பிரதேசத்தில் 80 வயது பழங்குடியின மூதாட்டி வரைந்த ஓவியங்கள் இத்தாலி ஓவியக்கண்காட்சியில் இடம் பிடித்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம், லோர்கா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோத்கையா பாய் பைகா. தற்போது 80 வயதான ஜோத்கையா கடந்த 40 வருடங்களாக ஓவியங்களை வரைந்து வருகிறார். தன்னுடைய 40வது வயதில் கணவனை இழந்த ஜோத்கையா, தன் சோகங்களுக்கு ஓவியம் மூலம் ஆறுதல் தேடியுள்ளார். மலைகளிலும், கிராமங்களிலும் தான் பார்க்கும் விலங்குகள், காட்சிகள் என அனைத்தையும் வண்ணம் குழைத்து ஓவியமாய் தீட்டியுள்ளார். தற்போது அவரது ஓவியங்கள் இத்தாலியில் நடைபெற்று வரும் ஓவியக் கண்காட்சியில் இடம்பிடித்துள்ளன.
இது குறித்து பேசிய ஜோத்கையா, “நான் பார்க்கும் விலங்குகளை ஓவியங்களாய் வரைகிறேன். ஓவியத்துக்காக நான் இந்தியாவில் சில இடங்களுக்கும் பயணம் செய்துள்ளேன். எனக்கு ஓவியத்தை தவிர எதுவுமே செய்யவில்லை. 40 வயதில் என் கணவரை இழந்தேன். அதற்குப் பின் என் கவனத்தை ஓவியம் பக்கம் திருப்பிவிட்டேன். ஓவியம் தான் என்னை வாழவைத்தது. எனது ஓவியங்கள் உலகளவில் சென்றது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
ஜோத்கையா குறித்து பேசிய அவரது ஓவிய ஆசிரியர், ''தன்னுடைய சோகங்களை எல்லாம் ஜோத்கையா ஓவியத்துக்குள் அடக்கினார். தற்போது அவரது ஓவியங்கள் இத்தாலி வரை சென்றது மகிழ்ச்சி. அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்