பஹல்காம் தாக்குதல் | பயங்கரவாதியின் பகீர் பின்னணி.. சதித் திட்டம் தீட்டியது எப்படி?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. அதை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் கதை, சோகத்தை அளவிட முடியாததாக இருக்கிறது. அந்த அளவுக்கு கடுமையான வடுக்களை பயங்கரவாதிகள் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதில் அம்மண்ணைச் சேர்ந்த ஒருவரே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதும், அவர்களுடன் இணைந்து இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கொன்று குவித்திருப்பதும்தான் இணையத்தில் வைரலாகி வரும் செய்தியாக உள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த மண்ணின் சதிகாரராக அடையாளப்படுத்தப்படுபவர், ஆதில் உசேன் தோக்கர். இவர், இரண்டு பாகிஸ்தானியர்களான ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகியோருடன் இணைந்து படுகொலையைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததாக போலீசாரால் கட்டம்கட்டப்படுகிறார். இவரைப் பற்றிய விவரங்களை காவல் துறையினர் சேகரித்துள்ளனர். அது, பகீர் தருவதாக உள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 50 கி.மீ தெற்கே உள்ள பிஜ்பெஹாராவில் உள்ள குர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ஆதில் உசேன் தோக்கர். கடந்த 2018ஆம் ஆண்டு, தனது வீட்டைவிட்டு வெளியேறி மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். தோக்கர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, எல்லைக்கு அப்பால் செயல்படும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர், பாகிஸ்தானில் அவர் நுழைந்ததும், குர்ரே கிராமம் மற்றும் தனது குடும்பத்தினருடனான தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் ஆயுதப் பயிற்சி எடுத்து வந்துள்ளார். பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் அவர் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். இதற்காக அவர் கரடுமுரடான மற்றும் தொலைதூர பூஞ்ச்-ரஜோரி பாதையைத் தேர்வு செய்துள்ளார். இந்தப் பாதை செங்குத்தான மலைகள், அடர்ந்த காடுகளைக் கொண்டது. இந்திய ராணுவத்திடமிருந்து சிக்காமல் இருப்பதற்காக இந்தப் பாதையை அவர் தேர்வு செய்து, இறுதியில் மூசா பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். அவருடன், நான்கு பேர் கொண்ட குழுவும் வந்துள்ளது.
அவர், சொந்த கிராமத்திற்குச் செல்வதற்கு முன்பு சில காலம் கிஷ்த்வாரில் தங்கியுள்ளார். அதன்பிறகே, அவர் அனந்த்நாக் வந்துள்ளார். அங்கேயும் அவர் தலைமறைவாகவே இருந்துள்ளார். இதற்கிடையே தனது குழுவினரை பாதுகாப்பான இடங்களில் மறைத்து வைத்துள்ளார். எனினும், அவர்களுடன் தொடர்பிலேயே இருந்துள்ளார். தவிர, செயலற்ற தீவிரவாத குழுவினரிடமும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில்தான் பெரிய தாக்குதலை நடத்த அவர் திட்டம் தீட்டி வந்துள்ளார். அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அதன் பயனாகத்தான் ஏப்ரல் 22ஆம் தேதி பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். இவ்வாறு தோக்கர் பற்றிய தகவல்கள் உளவுத் துறை விசாரணையில் வந்துள்ளது. தொடர்ந்து அவரைப் பற்றிய தேடுதலும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.