“பயங்கரவாதத்திற்கு எதிரா தீர்க்கமா போராடுவோம்; காஷ்மீர் மக்கள் உடன் இருப்பாங்க! ” - உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. அதை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் கதை, சோகத்தை அளவிட முடியாததாக இருக்கிறது. அந்த அளவுக்கு கடுமையான வடுக்களை பயங்கரவாதிகள் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாள் இரவாக, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. துத்மரி கலி, ராம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள எல்லைச் சாவடிகளில் இருந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு முறியடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதல் சம்பவம் அரங்கேறியதில் இருந்து, தொடர்ந்து எல்லைப் பகுதியில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தான் படையினரை, இந்திய ராணுவத்தினர் திறம்பட எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கும் அதன் தோற்றத்திற்கும் எதிராக ஒரு தீர்க்கமான போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தம்முடைய எக்ஸ் தள பதிவில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கும் அதன் தோற்றத்திற்கும் எதிராக ஒரு தீர்க்கமான போராட்டம் நடத்தப்பட வேண்டும். காஷ்மீர் மக்கள் பயங்கரவாதம் மற்றும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கியுள்ளனர், அவர்கள் இதை சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செய்தார்கள்.
இந்த ஆதரவைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. மக்களை அந்நியப்படுத்தும் எந்தவொரு தவறான செயலையும் தவிர்க்கவும். குற்றவாளிகளை தண்டிக்கவும், அவர்களுக்கு கருணை காட்டவும், ஆனால் அப்பாவி மக்களை இணையாக சேதப்படுத்த வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை, அதிகாரப்பூர்வமாக தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, தேசிய புலனாய்வு முகமை இந்த விவகாரத்தில் விரைவில் வழக்குப்பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. முதல்நாள் முதலே விசாரணை நடத்தி வருகிறது.