சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் வீரத்துடன் போராடி உயிரைவிட்ட இஸ்லாமிய தொழிலாளி!
நாட்டையை துயரத்தில் ஆழ்த்திய சோக சம்பவம் நேற்று ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் அரங்கேறியுள்ளது. வாழ்வின் கடினமான பொழுதுகளில் இருந்து விடுபட்டு சற்றே இளைப்பாற, வாழ்வின் மகிழ்ச்சியாக பொழுதுகளை கழித்திட அந்த பனிப் பிரதேசத்தை நோக்கி சென்றவர்களுக்கு இப்படியொரு கொடூரம் நிகழும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். பனிக்கட்டிகளோடு விளையாடி இயற்கையில் அழகை ஆராதிக்கச் சென்ற அவர்களின் உடலோடு துப்பாக்கி குண்டுகள் விளையாடிவிட்ட துயரத்தை என்னவென்று சொல்வது.
பஹல்காம் பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப் பலராலும் அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஒன்று, இரண்டல்ல கிட்டதட்ட 26 பேர் பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் உயிரற்ற சடலங்களாக மாறியிருக்கிறார்கள். தன் கண்முன்னே தான் நேசித்த தன்னுடைய இன்னொரு உயிராய் பாவித்து வந்த கணவனையோ, தன்னுடைய மகனையோ பறிகொடுத்த பெண்களின் கண்ணீர் அவ்வளவு எளிதில் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. தன் கணவனின் சடலத்தின் அருகே ஒட்டுமொத்த துயரத்தின் சாட்சியாக உறைந்துபோய் பெண் ஒருவர் அமர்ந்திருந்த அந்த புகைப்படம் பார்த்த அனைவரது நெஞ்சையும் உலுக்கியிருக்கும்.
நாடே இந்த துயர சம்பத்துக்கு கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்து வருகிறது.
இந்த துயர சம்பவத்தின் இடையே, தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க போராடி உயிரையே விட்ட குதிரை சவாரி தொழிலாளியின் வீரச் செயலும் நடந்திருக்கிறது. சையது அடில் ஹுசைன் ஷா என்ற அந்த குதிரை சவாரி நபர் தன் கண்முன்னே சுற்றுலாப் பயணிகள் சுடப்படுவதை கண்டு ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்துள்ளார். உடனே தங்களை நம்பி வந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த அவர், உடனடியாக செயலில் இறங்கினார். மிக தைரியாக பயங்கரவாதி ஒருவனிடம் சென்ற அவர், அவனிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக இந்தப் போராட்டத்தில் அவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர்தான். தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தால் தன்னை நம்பி வந்த சுற்றுலா பயணிகளின் உயிரை பாதுகாக்க நினைத்த அவரது மனதிற்கு ஈடு இணையே கிடையாது. இந்த இடத்தில் தன்னுடைய மதத்தை கடந்து மனித நேயத்தை அவர் பின்பற்றி அதற்கு விலையாக உயிரையே கொடுத்திருக்கிறார்.
ஹுசைன் ஷா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு அவரது வருமானம் ஒன்றே வழியாக இருந்தது. இதனால், அந்த குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அவரது தந்தை சையது ஹைதர் ஷா ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில், “என்னுடைய பஹல்காமிற்கு நேற்று வேலைக்கு சென்றான். மாலை 3 மணிக்கு இந்த நிகழ்வை பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். நாங்கள் அவனது செல்போனுக்கு அழைப்பு கொடுத்தோம். ஆனால், அந்த போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் மாலை 4.40 மணி போன் ஆன் ஆகியது. ஆனால் யாரும் போன் எடுக்கவில்லை. நாங்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றோம். பின்புதான் பயங்கரவாதிகள் தாக்குதலில் என் மகன் கொல்லப்பட்டதை அறிந்தோம். இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கப்பெற வேண்டும்” என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
அனந்த்நாக் பகுதியில் உள்ள சையது அடில் ஹுசைன் ஷாவின் சொந்த கிராமத்தில் அவருக்கு இறுதி சடங்குகள் நிகழ்ந்து. முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரும் அதில் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, "என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நம்முடைய மாநிலத்தை சுற்றிப்பார்ப்பதற்காக விருந்தினர்கள் விடுமுறைக்காக வந்திருந்தார்கள். கெடு வாய்ப்பாக அவர்கள் சவப்பெட்டிகளில் அனுப்பப்பட்டுள்ளனர். தன்னுடைய வாழ்க்கைய சிரமத்திற்கு இடையே நடத்தி வந்த ஷாவின் உடல் சவப்பெட்டியில் வந்துள்ளது. வாழ்க்கை எப்படி இருந்தாலும் அவரது இறப்பு சாதாரணமானதாக இல்லை. தன்னுடைய துணிச்சலை அவர் நிரூபித்திருக்கிறார். தாக்குதலை தடுக்க முயற்சி செய்திருக்கிறார். அவரது குடும்பத்தை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். தேவையான உதவிகளை செய்வோம்” என்றார்.
ஹுசைன் ஷாவின் வீரத்தை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் உண்மையான மகன்கள் ஷா போன்றவர்களின் இதயத்தில் தான் குடியிருப்பதாக பலரும் கண்ணீருடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.