20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்திய மருத்துவருக்கு பத்மவிபூஷண்!

20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்திய மருத்துவருக்கு பத்மவிபூஷண்!
20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்திய மருத்துவருக்கு பத்மவிபூஷண்!

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலனோபிஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற நோய்கள் பல வளரும் நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அங்கு நோயாளி நீரிழப்பு காரணமாக இறக்கின்றனர். இதற்குத் தீர்வு காணும் வகையில் ஓ.ஆர்.எஸ். (ORS) எனும் கரைசலை கண்டுபிடித்தவர் மருத்துவர் திலீப் மஹாலனோபிஸ். இவருடைய கண்டுபிடிப்பை, ‘20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்பு’ என தி லான்செட் அங்கீகரித்தது.

வயிற்றுப்போக்கு, காலரா மற்றும் நீரிழப்பு ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளை 93 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன்மூலம், உலகளவில் ஐந்து கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால், அவரது கண்டுபிடிப்புக்கு அவர் காப்புரிமை பெறவில்லை. இந்த மருந்தை கண்டுபிடித்த திலீப் பற்றி உலகம் அதிகளவில் அறியவில்லை. போற்றப்படாத மருத்துவராக இருந்து மறைந்தவர்.

டாக்டர் மஹாலனோபிஸ் 1975 முதல் 1979 வரை ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் ஏமனில் உலக சுகாதார அமைப்புக்கான காலரா கட்டுப்பாட்டுத் துறைகளில் பணியாற்றியுள்ளார். 1980 ஆம் ஆண்டில் பாக்டீரியா நோய்களை நிர்வகிப்பது குறித்த ஆராய்ச்சியில் உலக சுகாதார அமைப்பில் ஆலோசகராக பணியாற்றினார். 1990 இல் டாக்காவின் வயிற்றுப்போக்கு நோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் மருத்துவ ஆராய்ச்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு பொலின் விருது வழங்கி கவுரவித்தது. 2006இல் தாய்லாந்து அரசு, அவருக்கு இளவரசர் மஹிடோல் விருதை வழங்கி கெளரவித்தது.

கொல்கத்தாவின் குழந்தை சுகாதார நிறுவனத்தின் (ICH) இயக்குனர் அபுரா கோஷ், “மஹாலனோபிஸ் ஒரு சிறந்த மருத்துவர் மற்றும் விஞ்ஞானி. அவர், மற்றவர்களை நேசிக்கும் நல்ல குணமுள்ள மனிதர். காலரா மற்றும் குடல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் அவர் ஒரு முன்னொடியாகத் திகழ்ந்தார். அவரது பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

"அவரது மரணம் ஒரு சகாப்தம். அவருடைய ஓ.ஆர்.எஸ். கண்டுபிடிப்பு மகத்துவம் நிறைந்தது. எளியவகையில் கிடைக்கக்கூடியது. விலையும் குறைவானது. அவருடைய விடாமுயற்சியின் காரணமாகத்தான் இன்று ஓ.ஆர்.எஸ். ஒவ்வொரு வீடுகளின் பெயராக மாறியிருக்கிறது” என புனேவைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் சம்பதா தம்போல்கர் தெரிவித்துள்ளார்.

மஹாலனோபிஸ், தன் வாழ்நாளின் சேமிப்பாக வைத்திருந்த ரூபாய் 1 கோடி பணத்தை, அவர் முதலில் குழந்தை மருத்துவராகப் பணியைத் தொடங்கிய ஐசிஹெச் என்ற மருத்துவமனைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த மருத்தவர் திலீப் மஹாலனாபிஸுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண், வழங்கப்பட்டுள்ளது. 1971 வங்காளதேச விடுதலை போரின்போது அகதிகள் முகாம்களில் பணியாற்றிய திலீப் மஹாலனோபிஸ், ORS இன் செயல்திறனை நிரூபித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com