“பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார் ஆதித்யநாத்” - ப.சிதம்பரம்

“பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார் ஆதித்யநாத்” - ப.சிதம்பரம்
 “பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார் ஆதித்யநாத்” - ப.சிதம்பரம்

இந்திய நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் பேசி வரும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். 

மதரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரிப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி ஆகிய இருவரும் மத ரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தன. 

இதையடுத்து யோகி ஆதித்யநாத்திற்கும் மாயாவதிக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று காலை 6 முதல் 72 மணி நேரத்திற்கு உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேபோல், இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், காரைக்குடி அருகே புதுவயலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தன்னுடைய பேச்சால் தன்னுடைய நடவடிக்கையால் பிரித்தாளும் சூழ்ச்சியை யோகி ஆதித்யநாத் கையாளுகிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்கும் உத்திரபிரதேச முதலமைச்சர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது. முதல் முறையாக ஒரு முதலமைச்சருக்கு இதுபோன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தன்மானமுள்ளவராக இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com