முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவர் சிதம்பரத்துக்கு உடல்நல பரிசோதனைகள் செய்து சான்றளித்தார். இதனையடுத்து ப.சிதம்பரம், சிபிஐ தலைமையகத்தின் தரைத்தளத்தில் உள்ள விருந்தினர் அறை எண் ஐந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, காலை 10 மணியளவில் சிபிஐ துணை ஆய்வாளர் ஆர்.பார்த்தசாரதி தலைமையிலான அதிகாரிகள், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 305 கோடி ரூபாய் முதலீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளனர். சிபிஐ சார்பில் 10 முதல் 14 நாட்கள் வரை காவலில் எடுக்க அனுமதி கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் இன்று ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனப்படுகிறது. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினாலும் அவரை உடனடியாக கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. நீதிமன்றத்திற்கு எம்.பி கார்த்தி சிதம்பரமும் வருகை தந்துள்ளார்.