”மரணத்தை அருகில் கண்டேன்” - ஒவைசி கார் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு மக்களவையில் கண்டனம்!

”மரணத்தை அருகில் கண்டேன்” - ஒவைசி கார் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு மக்களவையில் கண்டனம்!
”மரணத்தை அருகில் கண்டேன்” - ஒவைசி கார் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு மக்களவையில் கண்டனம்!

மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு மக்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமையன்று ஒவைசி காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவரைக் குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு கட்சி வித்தியாசங்களைக் கடந்து, மக்களவையில் இன்று ஒருமனதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

6 அடி தூரத்தில் இருந்து தன்னை கொலை செய்ய  முயன்றவர்கள் துப்பாக்கியால் சுட்டதாக ஒவைசி பேசினார். மரணத்தை தான் மிகவும் அருகில் கண்டதாகவும், ஆனால் தனக்கு உயிர் குறித்து பயம் இல்லை என்றும் அவர் மக்களவையில் தெரிவித்தார். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு பிறகு அரசு அளித்துள்ள கூடுதல் பாதுகாப்பு தனக்கு தேவையில்லை எனவும் ஒவைசி கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கட்கிழமையன்று மக்களவையில் அறிக்கை அளிப்பார் எனவும் அவர் கூறினார்.

சீமான் - தினகரன் கண்டனம்

இதனிடையே, ஒவைசி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரபிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு திரும்பிக் கொண்டிருந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொடூர செயல் கண்டனத்துக்குரியது. உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள அசாதுதீன் ஒவைசிக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் உயரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்" என சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உத்தரபிரதேசத்தில் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தக் கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

- கணபதி சுப்பிரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com