பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு!
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ரூ.2,012 கோடி செலவாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம், “பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சென்றார். அதற்கான செலவு எவ்வளவு?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், ‘’ பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.2,012 கோடி செலவாகி இருக்கிறது. மோடி பயணம் செய்த ஏர்இந்தியா விமானப் பராமரிப்புக்கு மட்டும் ரூ.1,583 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.