\
Nigerian Kidnapped
Nigerian Kidnapped reuters

ஒரே இரவில் 600 பேர் மாயம்.. நைஜீரியாவில் அரங்கேறிய பயங்கரம்.. மீட்புப் பணியில் ராணுவம்!

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒரே பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒரே பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் அரங்கேறிய இந்த பயங்கரம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள டகேரா உள்ளிட்ட கிராமங்களில் தொழுகை நடைபெற்றுள்ளது. இந்தத் தொழுகையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மசூதிக்குள் புகுந்த ஆயுதக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல கிராமங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Nigerian Kidnapped
Nigerian Kidnapped reuters

ஒரே நேரத்தில், பல கிராமங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 600 பேர் கடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், காடுகளுக்குள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஆயுதம் ஏந்திய கும்பலால் சூழப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பல குடும்பங்கள் அந்த வீடியோவில் தங்களது உறவினர்களை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான பெனினை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், நைஜீரியாவின் மிகப்பெரிய கூட்டுக் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நைஜீரியாவில் அடுத்த ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கடத்தல் சம்பவம் அரசுக்கு அரசியல் ரீதியான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Nigerian Kidnapped
Nigerian Kidnapped reuters

இதையடுத்து, நைஜீரிய அதிபர் போலா டினுபு, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார். கடத்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மீட்கும் வரை நடவடிக்கை தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும், இந்தக் கடத்தல் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். ஒரே இரவில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போனதாக வெளியாகியுள்ள தகவல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com