இமயமலையில் அபாயம்.. இந்திய பகுதியில் விரிவடையும் 400 பனிப்பாறை ஏரிகள்!
இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜூன் 2025க்கான பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் மாதாந்திர கண்காணிப்பு அறிக்கை, லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 432 பனிப்பாறை ஏரிகள் அவற்றின் நீர் பரவல் பகுதியில் வளர்ச்சியைக் காட்டியுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
CWC அறிக்கைபடி, இந்த ஏரிகள் திடீர் வெள்ளப்பெருக்கு அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இங்குள்ள 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாகவும், இந்தப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய நிலப்பரப்பில் மொத்தமாக 681 பனிப்பாறை ஏரிகள் உள்ள நிலையில், 432இல் 2023ஆம் ஆண்டைவிட 2025 ஜூனில் அதிக நிலப்பரப்பில் நீர் தேங்கி விரிவடைந்துள்ளது.
2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பனிப்பாறை ஏரிகளின் நிலப்பரப்பு 1,917 ஹெக்டேரிலிருந்து 2,508 ஹெக்டேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, இமயமலைப் பகுதி முழுவதும் ஜூன் 2025இல் கண்காணிக்கப்பட்ட 2,843 பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில், 1,435 பனிப்பாறைகளில் பரப்பளவு அதிகரித்துள்ளன. 1,008 குறைந்த அளவைக் காட்டுகின்றன. 108 எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. மேலும் 292ஐ தொலைநிலை உணர்திறன் தரவுகளிலிருந்து பகுப்பாய்வு செய்ய முடியவில்லை” என்று அறிக்கை தெரிவிக்கிறது
இதில், அருணாச்சலப் பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான விரிவடையும் ஏரிகளைக் கொண்டுள்ளது (197). அதைத் தொடர்ந்து லடாக் (120), ஜம்மு-காஷ்மீர் (57), சிக்கிம் (47), இமாச்சலப் பிரதேசம் (6) மற்றும் உத்தரகண்ட் (5) ஆகியவை உள்ளன. ஒட்டுமொத்தமாக, இமயமலைப் பகுதியில் ஜூன் 2025இல் 1,435 பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்துள்ளன. ”காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை சமாளிப்பதில் இமயமலைப் பகுதி (HR) முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறது. இயற்பியல் ரீதியாக, மலைப் பனிப்பாறைகள் சுருங்குவதும், பனிப்பாறை ஏரிகளின் விரிவாக்கமும் இந்த சூழலில் காலநிலை வெப்பமயமாதலின் மிகவும் அடையாளம் காணக்கூடிய மற்றும் மாறும் தாக்கங்களில் ஒன்றாகும்" என்று அறிக்கை தெரிவித்துள்ளது.