
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 குற்ற வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞரும் பா.ஜ.க தலைவருமான அஸ்வினி உபாத்யாய் என்பவர், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், குற்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை மாநில மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களிடம் இருந்து விரிவான தகவல்களை கேட்டிருந்தது. அதனடிப்படையிலேயே சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்க முடியும். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, மாநில மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிடம் இருந்து பெற்ற தகவல்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதில், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இப்போதை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 4,122 குற்ற வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகள் உள்ளன.