குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் மீட்பு, 6000 பேர் இடமாற்றம்
கனமழையால், குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், இந்திய விமானப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அஸ்ஸாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். கனமழை காரணமாக சுரேந்திர நகர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லிம்டி, சாய்லா, சோட்டிலா கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
இந்த வெள்ளத்தால் இதுவரை 2 பேர் இறந்துள்ளனர். 6000 பேர் தங்கள் இடங்களில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், முக்கிய ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதுவரை இந்த ஆண்டிற்கான பருவமழையில் 52 சதவீதம் பெய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் 48 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்றும் குஜராத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.