'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?

'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?

ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலில், லாக்டவுன் காலத்தில் PM-KISAN திட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு நிதியுதவிகள் செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது.

லாக்டவுன் காலத்தில், மார்ச் 23 முதல் ஜூலை 31, 2020 வரை, விவசாயிகளுக்கு நிதி மற்றும் உதவி தேவைப்படும்போது, PM-KISAN திட்டத்தின் கீழ் 11.2 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் சென்று அடையவில்லை என்று தெரியவந்துள்ளது.

காமன்வெல்த் மனித உரிமை ஆர்வலரான வெங்கடேஷ் நாயக், விவசாயிகள் நிதியுதவி திட்டம் குறித்தும் அதற்கான பயனாளிகளின் வரையறை குறித்தும் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு, மத்திய அரசு கொடுத்த பதிலில்தான் இந்த விவரம் வெளிவந்துள்ளது.

மேலும், டிசம்பர் 2020 இறுதி வரை, கிட்டத்தட்ட 44% பணப்பரிமாற்ற புகார்களும் தீர்க்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மொத்தம் 11,29,401 தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதில் 11 மாநிலங்களில் இருந்து 11,22,389 பேருக்கும், எட்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 7,012 பேருக்கும் பணப்பரிவர்த்தனைகள் தோல்வி அடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பயனாளிகள் பற்றிய தரவு இல்லை!

பணப்பரிமாற்ற தோல்விகளால் எத்தனை பயனாளிகள் பாதிக்கப்பட்டார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்று நாயக் கூறியுள்ளார்.

மேலும், அவர், ``கோவிட் -19 தொற்றுநோயின் உச்சத்தில், அதாவது லாக்டவுன் காலத்தில் ஏராளமான ஏழை பிரதமர்-கிசான் பயனாளிகள் வெற்றிகரமாக நிதி பெற்றிருந்தாலும், அவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோர் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறவில்லை. சிபிஐஓ தரவுத் தொகுப்பை அனுப்பிய நேரத்தில் பணப்பரிமாற்ற தோல்வி தொடர்பாக கிட்டத்தட்ட 44% வரிசைப்படுத்தப்படாமல் இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

பயனாளி தரவிலும் முரண்பாடு!

PM-KISAN-இன் பிரத்யேக வலைதளத்தில் கொடுத்துள்ள தகவலின்படி பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது மற்றொரு "புதிரான விஷயம்" தெரியவந்துள்ளது என்று நாயக் கூறியுள்ளார்.

``ஒன்பது கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு நிதி உதவி கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், பிரதமர்-கிசான் இணையதளத்தில் காண்பிக்கப்படும் பயனாளிகளின் சமீபத்திய எண்ணிக்கை 11.50 கோடி ஆகும். இந்த முரண்பாட்டை அரசாங்கம் விளக்க வேண்டும்" என்று கூறியிருக்கும் நாயக், தலைமை பொது தகவல் அதிகாரி கொடுத்த சமீபத்திய பதிலில் மேலும் இரண்டு தரவுத்தொகுப்புகளை வழங்கியுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

அவற்றில் ஒன்றில், மாநில வாரியாக PM-KISAN தவணையை பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றத் தவறிய சம்பவங்களின் எண்ணிக்கையும், மற்றொன்றில் சாதி மற்றும் பாலின அமைப்பு மற்றும் தகுதியற்ற நபர்களுக்கு செலுத்துதல் பற்றிய மாநில மற்றும் யூனியன் பிரதேச வாரியான தரவுகள் ஆகும்.

அதன்படி, மொத்த பணப்பரிமாற்ற தோல்விகளில் 99%-க்கும் அதிகம் மாநிலங்களிலும், கிட்டத்தட்ட 0.62 சதவீதமும் யூனியன் பிரதேசங்களிலும் நடந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக நாயக் கூறியிருக்கிறார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Wire

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com