உ.பி., ராஜஸ்தானில் புழுதிப் புயலுக்கு 100-க்கும் அதிகமானோர் பலி
உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புழுதிப் புயலுக்கு 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று கடுமையாக புழுதி பறக்க புயல் வீசியது. பலத்த மழையும் அப்போது கொட்டித் தீர்த்தது. இதில் ஏராளமான மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளன. வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஏற்பட்ட புழுதிப் புயலுக்கு 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 73 பேரும், அண்டை மாநிலமான ராஜஸ்தானில் 36 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். புயல் வீசும்போது ஆங்காங்கே நின்ற மரங்கள் சரிந்து விழுந்ததில் பலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த புழுதி புயல் டெல்லியையும் தாக்கியது. ஆனால் அங்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. புயலுக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குழும்பங்களுக்கு அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ளனர். காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு அதிக இடியுடன் கனத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.