
பனிப்பொழிவு காரணமாக சாலை தெளிவாக தெரியாததால் ஏற்படும் விபத்து காரணமாக 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் இந்தியாவில் பனிப்பொழிவுக்கான வானிலை. குறிப்பாக வட இந்தியாவில் கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. பனிப்பொழிவால் சாலைகளின் வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வெண்பனி புகை போல சாலையை மூடி இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் விபத்து ஏற்படுகிறது.
இப்படி பனிப்பொழிவு காரணமாக ஏற்படும் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புள்ளிவிவரத்தின் படி 2016ம் ஆண்டு 9317 பேரும், 2017ம் ஆண்டு 11090பேரும் உயிரிழந்துள்ளனர். வருடத்துக்கு வருடம் பனிப்பொழிவால் ஏற்படும் விபத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2017ல் இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் 3000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தப்படியாக பீகார், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
வானிலைக்கு ஏற்ப கவனமாக வாகனங்களை இயக்குதல், பனிப்பொழிவு காலத்துக்கு ஏற்ப பிரத்யேக முகப்பு விளக்குகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட சில வழிகளை கடைபிடித்தாலே விபத்தை தடுக்கலாம் என சர்வதேச சாலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 24ம் தேதி ஹரியானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விபத்தில் உயிரிழந்தனர். அதே போல் டிசம்பர் 29ம்தேதி சண்டிகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.