3 ஆண்டுகளில் வேட்டை, விபத்தால் 373 யானைகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 75 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் உயிரிழப்பு குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வேட்டை மற்றும் விபத்துகளுக்கு 373 யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவித்துள்ளது. மேலும் 62 யானைகள் ரயிலில் அடிபட்டும், 226 யானைகள் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டும், 26 யானைகள் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் வனத்துறை கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரயிலில் அடிப்பட்டு 153 யானைகள் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் படி மொத்தம் 75 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 48 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், 13 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதாகவும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2017 ம் ஆண்டை பொறுத்தவரை மொத்தம் 105 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த ஆண்டு யானைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டு 16 மாநிலங்களைச் சேர்ந்த 227 பேர் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக அசாமில் 86 பேரும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 45 பேர் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.