உ.பி.யில் அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிட உத்தரவு
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மையும், தூய்மையும் முக்கியம் என்பதால், அனைத்து அமைச்சர்களும், பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் தங்களது அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அதேபோல அரசு ஊழியர்களும், பொதுமக்கள் அறியும் வகையில் சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அரசுப்பணிகளில் அமைச்சர்களின் குடும்பங்கள் தலையிடாமல் இருக்கவேண்டும் எனவும், தங்கள் செய்கைகளால் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அரசுத் திட்டங்கள் சரியான நேரத்தில் திறம்பட நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.