இந்தியா
எம்.பி.க்களின் ஊதிய பிடித்தம்: அவசர சட்டத்தை ரத்து செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்
எம்.பி.க்களின் ஊதிய பிடித்தம்: அவசர சட்டத்தை ரத்து செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்
உறுப்பினர்களின் கருத்தையறியாமல் மத்திய அரசே தன்னிச்சையாகச் சம்பளத்தைக் குறைத்து அவசரச் சட்டம் பிறப்பித்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு எதிரொலியாக பிரதமர் மற்றும் எம்.பிக்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், எம்பிக்களுக்கான ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியம் சட்டத்தின் கீழ் பிரதமர், எம்பிக்கள், ஓய்வூதியம் பெறும் எம்பிக்கள் சம்பளத்தில் 30 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும், இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனரும் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 30சதவீத்தைப் பிடித்தம் செய்யப்போவதாகத் தன்னிச்சையாக முடிவெடுத்து மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியிருப்பது, இந்த நாடு 'பொருளாதார அவசரநிலையை' நோக்கிப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணான இந்த அவசரச் சட்டத்தை உடனடியாக ரத்துசெய்யவேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். உறுப்பினர்களின் கருத்தையறியாமல் மத்திய அரசே தன்னிச்சையாகச் சம்பளத்தைக் குறைத்து அவசரச் சட்டம் பிறப்பித்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.
தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அந்தந்தத் தொகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதற்கானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியைத் தனது தொகுதியின் நலன்களுக்காகச் செலவிடுவதே சரியானதாக இருக்கும். மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் அதைச் சேர்த்தால் அந்த தொகையைக்கொண்டு எந்த மாநிலத்துக்கு மத்திய அரசு செலவிடப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே, இது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல; தொகுதி மக்களை வஞ்சிப்பதுமாகும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி இருக்காது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கொரோனா ஒழிப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இவர்களின் தவறான பொருளாதாரப் பாதையால் ஏற்கெனவே சீர் குலைந்துள்ள நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதைப் போல் தெரிகிறது. அரசுக்கு கொரோனா ஒழிப்பிற்குச் செலவிட வேண்டுமெனில் வருவாயை எங்கிருந்து திரட்டவேண்டும்? ஒரு சதவீதம் கார்ப்பரேட் வரிகளை உயர்த்தினாலே குறைந்த பட்சம் 50000 கோடி ரூபாய்கள் கிடைக்கும். கடந்த ஆண்டு தந்த கார்ப்பரேட் வரி சலுகைகளைத் தேசத்தின் நலனுக்காகத் திரும்பப் பெற்றால் 1,50, 000 கோடிகள் கிடைக்கும்.
ஆனால் அதற்கான அரசியல் உறுதியற்ற மத்திய அரசு, எம்.பி நிதியில் கைவைப்பது கொரோனா ஒழிப்பிற்கு உதவாது. உள்ளூர் மட்ட முன் முயற்சிகளை விரைவான மக்கள் சேவையைத்தான் இது பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.

