டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று முழு அடைப்புக்கு அழைப்பு
டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாய அமைப்பினர் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டுள்ளனர். விவசாயிகளை சமாதானப்படுத்த அரசு முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியையே தழுவி இருக்கின்றன. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் விவசாயிகள் , போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக , காங்கிரஸ், மதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி,தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போராடும் விவசாயிகளுக்கு நேரிலேயே ஆதரவை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பும் விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்த உள்ள சூழலில், விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டங்களில் உள்ள நன்மைகளை எடுத்துச் சொல்லப் போவதாக அறிவித்துள்ளார் பாஜக மாநிலதலைவர் எல்.முருகன்.

தேசிய அளவில் பார்த்தால் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சிவசேனா,ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தாலும், முழு அடைப்பில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com