எதிர் கட்சிகளின் வியூகம் பலிக்காது - பிரதமர் மோடி
பாரதிய ஜனதா அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி வெற்றி பெறாது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒருங்கிணைந்த இந்தியா என்ற பெயரில் கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடெங்குமிருந்து 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அனைத்து தலைவர்களும் மோடி அரசை அகற்ற வேண்டும் என உறுதியேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மதவாத அரசை வெளியேற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் இணையாதவரை மோடியும் அமித் ஷாவும் இணைந்து ஜனநாயகத்தை சிதைக்கும் பணியை செய்வார்கள் எனவும் கார்கே தெரிவித்தார். மோடியின் ஆட்சியின் கீழ் நாடு பெரும் பாதிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய ஆட்சிப் பகுதியான சில்வாசாவில் பேசிய பிரதமர் மோடி, “உண்மையில் தமக்கு எதிரான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைக்கவில்லை என்றும் மக்களுக்கு எதிரான கூட்டணியைத்தான் அவை அமைத்துள்ளன. லஞ்ச ஊழலில் திளைத்தவர்களுக்கு எதிராக தமது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் தான் தற்போது கூட்டணி அமைத்துள்ளதாகவும்” என்று அவர் குறிப்பிட்டார்.