பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி, முக.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
உள்நாடு மற்றும் உலக அளவில் கிடைக்கும் வாய்ப்புகளில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க கட்டாய உரிமம் வழங்குமாறும் கொரோனா பரவல் சூழ்நிலையில், அதிக நிதியில் நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணியை நிறுத்தவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியை கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு செலவிடுமாறும் பிஎம். கேர் நிதி மூலம் தடுப்பூசி, ஆக்சிஜன், மருத்துவக் கருவிகளை கொள்முதல் செய்யவும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர். தேவைப்படுவோருக்கு இலவசமாக உணவு தானியங்களை விநியோகிக்கவும், போராடும் விவசாயிகள் தங்கள் பணிக்குத் திரும்பி தானிய உற்பத்தியில் பங்களிக்க, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கடிதத்தில் சோனியா காந்தி, தேவகவுடா, சரத் பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், ஹேமந்த் சோரன், ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஹெச்.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

