2 மாதங்களுக்கு பின் புதுச்சேரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்..!
இரண்டு மாதங்களுக்கு பின் புதுச்சேரி கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அங்கு காலையிலேயே ஏராளமான மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.
வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் வெகுவாக ரசிக்கப்படும் புதுச்சேரி கடற்கரைக்கு பொது முடக்கத்தால் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஐந்தாம் கட்ட ஊரடங்கை தளர்வுகளுடன் அமல்படுத்திய மத்திய அரசு, தளர்வுகள் குறித்த முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே சூழ்நிலைகளுக்கேற்ப எடுக்கலாம் எனக் கூறியது.
இதனையடுத்து நேற்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் அமல்படுத்த இருக்கும் தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்தத் தளர்வுகளின் அடிப்படையில் இன்று முதல் புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 65 நாட்களுக்குப் பிறகு கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இன்று அங்கு ஏராளமான மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.