தாஜ்மஹாலில் வெளியாட்கள் தொழுகை செய்யக் கூடாது - உச்சநீதிமன்றம்

தாஜ்மஹாலில் வெளியாட்கள் தொழுகை செய்யக் கூடாது - உச்சநீதிமன்றம்

தாஜ்மஹாலில் வெளியாட்கள் தொழுகை செய்யக் கூடாது - உச்சநீதிமன்றம்
Published on

உலக அதியசங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வளாகத்திற்குள் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் தொழுகை செய்ய அனுமதியில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலமான தாஜ்மஹாலுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை. வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தாஜ்மஹால் வளாகத்தில் தொழுகை செய்வார்கள். அன்று பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

ஆகவே ஆக்ரா பகுதிவாசிகளை தவிர வெளியாட்கள் யாரும் தாஜ்மஹாலில் தொழுகை நடத்தக்கூடாது என ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாஜ்மஹால் மஸ்ஜித் மேலாண்மைக் குழுவின் தலைவர் சையத் இப்ராஹிம் ஹுசைன் சைதி  கடந்த ஜனவரி மாதம்  உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர்  அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  

அப்போது, “16ம் நூற்றாண்டு நினைவுச் சின்னமான தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்று. அது நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். ஏன் இதுபோன்ற தொழுகைகளுக்கு தாஜ்மஹால் செல்ல வேண்டும். தொழுகை நடத்த பல்வேறு மசூதிகள் உள்ளன. அங்கு சென்று தொழுகை நடத்தலாம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், உள்ளூர்வாசிகளை தவிர்த்து மற்றவர்கள் தாஜ்மஹாலில் தொழுகை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதோடு, வெளியாட்கள் தொழுகை செய்ய வருகிறார்கள் என்றால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆக்ரா மாவட்ட ஆட்சியர் கவுரவ் தயாள் கூறுகையில், “தற்போது முதல் ஆக்ரா நகரவாசிகளை தவிர மற்றவர்களை தாஜ்மஹால் வளாகத்திற்குள் தொழுகை செய்ய அனுமதிக்க மாட்டோம். இதற்கு முன்பு 2013ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையும் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தது. ஆனால், அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com