ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், பத்தில் இருந்து ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் இதுவரை 9 பேர் சபரிமலை வந்து பாதியிலேயே திரும்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக கடந்த சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்தில் இருந்து ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல முயன்று, போலீஸ் தடியடி நடத்தி, சபரிமலையை மூடுவோம் என்ற அளவில் விவகாரம் வலுத்தது.
இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலைக்கு சென்றனர். ஐ.ஜி ஸ்ரீஜித் தலைமையில் இரண்டு பெண்களுக்கும் பலத்த பாதுகாப்பு தரப்பட்டது. இதுவரை எந்த பெண்களும் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், 2 பெண்கள் சென்றனர். தலைகவசம் உள்ளிட்ட காவல்துறையின் பாதுகாப்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் பெண்களை அனுமதிக்க முடியாது என பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது கேரள அரசு.
இதுவரை 8 பேர் சபரிமலைக்கு வந்ததாகவும் யாரும் கடைசிவரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆந்திராவில் இருந்து நேற்று வருகை தந்த வசந்தி, ஆதிசேஷி ஆகிய பெண்களை பம்பைக்கு 200 அடி முன்னதாகவே பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். கேரளாவில் வந்திருந்த பெண் ஒருவர் கடுமையான மழை காரணமாக மலை ஏறுவதை நிறுத்திவிட்டு பாதியிலேயே திரும்பினார். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்திருக்கும் நிலையில், மஞ்சு என்ற பெண் போலீஸ் பாதுகாப்பு கோரினார். ஆனால் அவரின் பின்புலம் விசாரிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குகள் பதிவாகி இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இரண்டு பெண்கள் பக்தர்களின் போராட்டத்தினாலும், ஒருவர் நிலைமை கருதி தானாகவும் திரும்பி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சபரிமலைக்கு வந்த திருச்சியை சேர்ந்த லதா என்ற பெண்ணை 50 வயதைக்கடக்காதவர் போல இருப்பதாக்கூறி பக்தர்கள் அனுமதி மறுத்தனர். அவர் தனது ஆதார் அட்டையை காண்பித்து தனக்கு 52 வயதாகிறது எனக்கூறியதால் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டார்.