கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் நிஜோ, இவருக்கு சில்பா என்ற மனைவியும், ஏபேல், ஆரோன் என்ற இரு குழந்தைகளும் இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, அவருடைய நண்பர்கள் வேலைக்காக நிஜோவுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவருடைய நம்பர் ஸ்விட்ச் ஆப் என்று வந்த நிலையில், அவருடைய சகோதரருக்குப் போன் செய்துள்ளனர். அவர் கீழ்வீட்டில் இருந்ததால், உடனே மேலே சென்று பார்த்துள்ளார். அங்கு நிஜோவும் அவரின் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையிலும், இரண்டு மகன்கள் கட்டிலிலும் இறந்தநிலையில் கிடந்திருக்கின்றனர்.
இதுகுறித்து உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘நிஜோவின் மனைவி சில்பா வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றதாகவும், அதற்குத் தேவையான பணத்தைத் திரட்டமுடியாததால், குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் பின்னர் நடைபெற்ற விசாரணையில், நிஜோ, சில்பா ஆகிய உறவினர்களின் செல்போனுக்கும் சில்பாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதுடன், ’அவர் (சில்பா) வாங்கிய பணத்தை உடனடியாக தராவிட்டால், இந்த ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவோம்’ என மேசெஜும் அனுப்பி மிரட்டியுள்ளனர்.
இதனிடையே, இறந்த நிஜோ - சில்பா குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்து குறுஞ்செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை அவரது உறவினர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் இறந்த தம்பதியின் செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் லோன் ஆப் நிறுவனத்தினரின் கொடூர செயலால் ஒரு குடும்பமே தங்களை மாய்த்துக் கொண்ட சம்பவம் கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.