\
keyaa kunal banerji
keyaa kunal banerji X/@RupokAcharjee

இனம், பரம்பரை, சாதி.. இப்படியெல்லாம் நடக்குமா? 21 வயது இந்திய வீராங்கனைக்கு நடந்த அதிர்ச்சி!

21 வயது இந்திய பவர்லிஃப்டிங் வீராங்கனை கீயா குணால் பானர்ஜி, தென்னாப்பிரிக்காவில் நடந்த IPF உலக சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Published on
Summary

21 வயது இந்திய பவர்லிஃப்டிங் வீராங்கனை கீயா குணால் பானர்ஜி, 45.7 கிலோ உடல் எடையுடன் 140 கிலோ டெட்லிஃப்ட் தூக்கி தென்னாப்பிரிக்காவில் நடந்த IPF உலக சப்-ஜூனியர், ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் இந்த சாதனைக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பாலியல் தொல்லை, சாதி-இனம் குறித்த அவதூறு, போலி கணக்குகள், AI மார்ஃபிங் படங்கள் என கடுமையான ஆன்லைன் தாக்குதல்களை எதிர்கொள்கிறார்.

இந்தியாவில் பொதுவாகவே ஒரு நபர் ஒரு துறையில் சாதிக்கிறார் என்றால் அவருடைய திறமையை கொண்டாடாமல், அவர் என்ன இனம், என்ன ஜாதி என இணையத்தில் தேடுவது வழக்கமாகி வருகிறது. சாதிக்க துடிக்கும் ஒரு நபருக்கு ஆதரவாகவோ அல்லது ஏணியாகவோ இல்லாத சாதியர்கள், சாதித்த பிறகு அவர் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், எங்கள் சாதியை சேர்ந்தவர் என்றும் கொண்டாடிக்கொள்ள மட்டும் தேடித்திரிவது தொடர்கதையாகி வருகிறது. இப்படியான சிக்கலான பாதிப்பைத்தான் சமீபத்தில் 21 வயதில் 140 கிலோ எடையைத்தூக்கி சாதித்த இளம் இந்திய வீராங்கனை எதிர்கொண்டுள்ளார்.

21 வயதான இந்திய பவர்லிஃப்டிங் வீராங்கனை கீயா குணால் பானர்ஜி, சமீபத்தில் தன்னுடைய எடையை விட 3 மடங்கு எடையான 140 கிலோ டெட்லிஃப்ட்டை தூக்கி வரலாற்றில் தடம்பதித்தார். அவருடைய இந்த சாதனை இணையத்தில் இவர் யார் என தேடித்தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டியது. தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 IPF உலக சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கீயா பங்கேற்றார். ஜூனியர் மகளிர் 47 கிலோ எடைப் பிரிவில் தனிநபர் டெட்லிஃப்ட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், 140 கிலோ எடையைத்தூக்கி பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தினார்.

அவருடைய இந்த சாதனையின் மிகப்பெரிய சிறப்பம்சம், அவரது உடல் எடைக்கும் தூக்கிய வெயிட்லிஃப்ட்டிங் எடைக்கும் இடையிலான வேறுபாடுதான். வெறும் 45.70 கிலோ எடையுள்ள அவர், தனது உடல் எடையை விட மூன்று மடங்குக்கும் அதிகமான எடையைத் தூக்கினார். 90 கிலோ ஸ்குவாட், 50 கிலோ பெஞ்ச் பிரஸ் மற்றும் 140 கிலோ டெட்லிஃப்ட் என மொத்தமாக 280 கிலோ எடையை தூக்கி 5வது இடம் பிடித்தாலும், பளுதூக்கும் வீரர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த போட்டியாக பார்க்கப்படும் டெட்லிஃப்ட்டில் 140 கிலோ எடையைத்தூக்கி 2வது இடம் பிடித்து அசத்தினார். இந்த முயற்சி, விரைவிலேயே இந்திய விளையாட்டின் சிறப்பம்சமாக மாறியதுடன், அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் முழுவதும் பரவியது. அவரது வலிமை மற்றும் சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால் சமூக வலைதளங்களில் தன்னுடைய சாதனையால் வைரலான பிறகு, ஆன்லைன் பாலியல் தொல்லை, சாதி-இனம் குறித்து பேச்சுக்கள், போலி சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட AI புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்ததாக 21 வயது கீயா வேதனை தெரிவித்துள்ளார்.

keyaa kunal banerji
ஒரே போட்டியில் 2 World Record.. சச்சினுக்கு பின் இந்தியாவின் கௌரவம்! வரலாற்றை புரட்டிப்போட்ட மந்தனா!

தன்னுடைய முந்தைய இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்ட பிறகு, புதிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ஓபன் செய்த கீயா, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் சந்தித்த மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதில் பேசியிருக்கும் அவர், வணக்கம்! இதைச் சற்று நிறுத்திப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில் IPF ஜூனியர் உலகப் போட்டியில் இந்தியாவுக்காக 'டெட்லிஃப்ட்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். எனக்குக் கிடைத்த ஆதரவையும் அங்கீகாரத்தையும் நான் மதிக்கிறேன்; அதே வேளையில், ஒரு இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனையாக நான் பின்வரும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது:

ஆன்லைன் பாலியல் துன்புறுத்தல், என் பெயரிலும் அடையாளத்திலும் போலியாக இயங்கும் கணக்குகள், எனது இனம், பரம்பரை மற்றும் சாதி குறித்துச் செய்யப்படும் சங்கடமான உரையாடல்கள், இதுஎல்லாவற்றிற்கும் மேலாக மிக மோசமான ஒன்று செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படங்கள். இவற்றில் எனது உடல் மற்றும் முகத்தின் தோற்றம் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலையில் எழுந்ததும், எனது சமூக ஊடகப் பக்கத்திலும், மற்றும் எனக்குத் தெரிந்த ஒவ்வொருவரின் பக்கத்திலும் இத்தகைய போலி AI படங்கள் நிறைந்திருப்பதைப் பார்ப்பது மிகுந்த மன உளைச்சலையும் அச்சத்தையும் தருகிறது.

நான் எப்போதும் எனது தனிப்பட்ட விஷயங்களை வெளியே பகிராத ஒரு நபர். என்னை அறிந்தவர்களுக்கோ அல்லது எனது பழைய கணக்கைப் பின்தொடர்ந்தவர்களுக்கோ இது தெரியும். நான் அதில் கூடப் புகைப்படங்களை அவ்வளவாக வெளியிட்டதில்லை. 300 Followers-ஐ கொண்ட எனது பழைய தனிப்பட்ட கணக்கை இன்ஸ்டாகிராம் முடக்கியபோது நிலைமை இன்னும் மோசமானது, அதனால்தான் இந்தக் புதிய கணக்கை உருவாக்கியுள்ளேன். இதை பொதுவெளியில் பகிர எனக்கு விருப்பமில்லை; ஆனால், எனது விளையாட்டு மற்றும் சாதனை குறித்த விஷயங்களில் எனது தரப்பு நியாயத்தை முன்வைக்கவும், மீண்டும் கணக்கு முடக்கப்படாமல் எனக்காக நான் குரல் கொடுக்கவும் வேறு வழியில்லை என்பதாலேயே இதை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என கூறியுள்ளார்.

டிஜிட்டல் AI உலகில் ஒரு பெண்ணின் தனியுரிமை குறித்த முக்கிய கேள்வியை கீயா முன்னிறுத்தியுள்ளார்..

keyaa kunal banerji
வைபவ் சூர்யவன்ஷிக்கு குறி.. கண்காணிக்கும் பிசிசிஐ.. களமிறக்கப்பட்ட லக்‌ஷ்மண்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com