ஓடும் ரயிலுக்கிடையே தண்டவாளத்தில் விழுந்த குழந்தை : வைரல் வீடியோ
ஓடும் ரயிலுக்கிடையே விழுந்த ஒரு வயது பெண் குழந்தை உயிர்பிழைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேசம் மதுரா பகுதியை சேர்ந்த சோனு மற்றும் ரணோ என்ற தம்பதியினர் ஜான்சி ரகருக்கு செல்ல ரயில் நிலையம் சென்றிருந்தனர். அப்போது அங்கு புறப்படுவதற்கு தயாராக நின்றிருந்த ரயில் ஒன்றில் தந்தை சோனு தனது மூத்த மகள் நயீரா (4) உடனும், தாய் ராணோ இளைய மகள் ஷாகிபா (1) உடனும் அமர்ந்திருந்தனர். டிக்கெட் எடுக்க பணப்பையை சோனு எடுக்க முயன்றபோது, தனது பணப்பை காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனால் தனது மனைவியிடம் ரயிலில் இருந்து இறங்குமாறு கூறிவிட்டு, மூத்த மகளுடன் சோனு இறங்கிவிட்டார்.
ஆனால் ரணோ ஒரு வயது குழந்தையுடன் இறங்குவதற்கு முன்னர் ரயில் புறப்பட்டு விட்டது. இருப்பினும் ரயில் மெதுவாகத்தானே செல்கிறது என அப்பெண் கீழே இறங்கினார். அப்போது அவர் கையில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி தண்டவாளத்திற்கும் ஓடும் ரயிலுக்கும் இடையே விழுந்தது. இதனால் அந்தத் தம்பதியினர் பதட்டமடைந்து கதற, அங்கிருந்த பயணிகளும் பதட்டமடைந்தனர். ஆனால் குழந்தை தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே கிடந்ததால் ரயில் அதன் மீது உரசக்கூடவில்லை.
சிறிது நேரத்தில் ரயில் கடந்து சென்றதும், அங்கிருந்த இளைஞர் ஒருவர் குழந்தையை இறங்கித் தூக்கினார். அப்போது குழந்தைக்கு சிறுகாயம் கூட ஏற்படவில்லை என அறிந்து அங்கிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். பின்னர் தாய், தந்தை இருவரும் குழந்தை மகிழ்ச்சியுடன் கொஞ்சிக்கொண்டே ஆனந்த கண்ணீருடன் அங்கிருந்து சென்றனர். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்ய, அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.